இதுவே முதல்வரின் மிகப்பெரிய ஆசை… அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடி!

மலைவாழ் மக்களின் கல்வியை ஊக்கப்படுத்திட வேண்டும் என்பதே தமிழக முதல்வரின் மிக பெரிய ஆவல் எனபள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

ஏற்காட்டில் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு சேலம் திரும்பிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செய்தியாளர்களை சந்தித்தார் .

அப்போது அவர் கூறும் போது,. இன்று காலை ஏற்காடு மலை கிராமங்களில் உள்ள இரண்டு பள்ளிகளை ஆய்வு செய்தேன். ஏற்காட்டில் உள்ள மலைகிராமங்களான புளியங்கடை , செங்காடு ஆகிய கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பழுதடைந்த நிலையில் இருந்த பள்ளியை ஆய்வு மேற்கொண்ட போது, கட்டிட சுவர்களில் விரிசல் இருந்தது. உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தப்பட்டு, சிதலம் அடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு, உடனடியாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த பள்ளி மட்டுமல்ல, பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிகளை இடித்து புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார்.
தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்து 31 பள்ளிகள் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு, இதற்காக இந்த ஆண்டு 1300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

முதல்வர் தலைமையில் விரைவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நட்ட உள்ளதாகவும், பேராசிரியர் அன்பழகனார் அறக்கட்டளை சார்பில் முதல்கட்டமாக மரத்தடியில் பாடம் படிக்கும் மாணவர்களுக்காக 2500 புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தை பொறுத்தவரை அங்கு பயிலும் குழந்தை களுக்கு ஆன் லைன் வகுப்பு துவங்கி உள்ளது. இது தவிர 9, 10 ,11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு அருகே உள்ள பாலாஜி கல்லூரியில் நேரடி வகுப்பு நடத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இது தவிர அந்த பள்ளியில் பயின்ற மாணவ ,மாணவியர்கள் தமிழகத்தில் எந்த பகுதியில் உள்ள பள்ளிகளிலும் சேர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது உடனடியாக சேர விரும்புபவர்கள் நான்கு கிலோ மீட்டருக்குள் உள்ள எந்த பள்ளிகளிலும் சேரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளிகளிலும் மனநல மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் உடல்நல மற்றும் மனநல மருத்துவர்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார், இதில் தமிழகத்தில் உள்ள 413 கல்வி யூனியன்கள் உள்ளது, ஒரு யூனியனுக்கு இரண்டு மனநல மருத்துவர்கள் என நியமிக்கப்பட்டு இவர்கள் மாணவர்களுக்கு கவுன்சிலிங் செய்வதற்கு 3 மாதத்திற்கு ஒரு முறை கவுன்சிலிங் கொடுக்க அறிவுறுத்தி உள்ளதாகவும், விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்திடும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், மாநில அளவில், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் செலவை அரசே ஏற்று நடத்திடவும் முடிவு செய்து உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

காலை சிற்றுண்டி குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் , இந்த திட்டம் துவங்குவது குறித்து தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று உறுதிபட தெரிவித்தார்.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் பணம் வசூலிப்பது தெரிய வந்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் நியமனம் குறித்து பதில் அளித்த அமைச்சர், பத்தாயிரத்து முந்நூறு ஆசிரியர்களை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.