6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க வேண்டும் – அன்புமணி!!

தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது பாமகவின் கொள்கை. இதை தமிழகத்தை ஆளும் திமுகவும், முன்பு ஆட்சி செய்த அதிமுகவும் ஏற்றுக் கொண்டுள்ளன. அதன்படி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் மத்திய அரசின் நிதியுதவியுடன் அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருந்தது.

இந்த மாவட்டங்களில் மத்திய அரசு நிதியுதவியுடன் 2022-23 கல்வியாண்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுமா என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியிருந்தேன். அதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார், ‘பின்தங்கிய மாவட்டங்களில் மத்திய அரசு நிதியுதவியுடன் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றும் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில் 75 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்த மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது’ என்று தெரிவித்துள்ளார்.

இதனால், மாவட்டத்துக்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கும் லட்சியத்தில் இருந்து தமிழகம் பின்வாங்க முடியாது. மத்திய அரசு மூன்று கட்டங்களிலும் ஒட்டுமொத்தமாக அறிவித்த 157 மருத்துவ கல்லூரிகளில், 55 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்ட போதிலும், பல்வேறு காரணங்களால், அவை இன்னும் அமைக்கப்படவில்லை. அவற்றை தமிழகத்துக்கு மாற்ற முடியுமா என்பது குறித்து மத்திய அரசுடன் தமிழக அரசு பேச வேண்டும்.

அதேநேரத்தில் 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்பது சாத்தியமாகக் கூடிய இலக்குதான். எனவே, இந்த ஆண்டிலும், அடுத்த ஆண்டிலும் தலா 3 மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே அமைக்க முன்வர வேண்டும். அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்கும் வகையில், தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அறிவிப்பை வேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.