இப்போ கலைஞர் பேனாவுக்கு சிலை அவசியமா?… பாஜக நிர்வாகி பரபரப்பு பேச்சு!

தமிழகத்திற்கு, மத்திய அரசு வழங்கும் மின் உற்பத்தி திட்டங்களுக்கான நிதி உதவிகளை மாநில அரசு முறையாக பயன்படுத்தினால் மின்கட்டண உயர்வு இருக்காது என பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது கூறிய வி.பி.துரைசாமி, தமிழக அரசுக்கு தற்போது நிதிச்சுமை உள்ள நிலையில், அரசின் கொள்கை முடிவு என்ற போதிலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக பேனா சிலை அமைக்கும் முயற்சியை தள்ளிப் போட வேண்டும்.
தற்போது சிமெண்ட், மணல், கம்பி உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பொருட்களின் விலையும், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து விட்ட நிலையில், இதுபோன்ற செயல்கள் தேவையா என்பதை மாநில அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் நடந்த பள்ளி தாக்குதல் சம்பவம் இதுவரை தமிழக வரலாற்றில், எந்த ஆட்சியிலும் நடந்திராத ஒரு சம்பவமாகும். ஏற்கனவே உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்த உடனேயே, மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அளவிற்கு வன்முறை, சூறையாடல், வெளியூரிலிருந்து ஆள்களை திரட்டி வன்முறையில் ஈடுபடுதல் போன்ற சம்பவங்களைத் தடுத்திருக்கலாம்.
மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை இடமாற்றம் செய்ததிலிருந்தே உளவுத்துறையின் தகவல் உண்மை என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த சம்பவத்தில் அரசியல்வாதிகளின் தலையீடும் உள்ளது என அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.