இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்தை தடுக்க வேண்டும் – வைகோ!

பொருளாதார வீழ்ச்சியால் நிலைகுலைந்து இருக்கும் இலங்கை அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கொதித்து எழுந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்நாட்டு அரசு இயந்திரம் நொறுங்கிக் கிடக்கிறது.

ஆனால் சிங்கள கடற்படையினர் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்து, இலங்கை சிறையில் அடைப்பதும், மீன்பிடிப் படகுகள் மற்றும் கருவிகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. மீன்பிடித் தடைக்காலம் 61 நாட்கள் முடிந்து ஜூன் 15 முதல் மீனவர்கள் மீண்டும் மீன்பிடித் தொழிலுக்கு சென்றுள்ளனர்.

கடந்த ஜூலை 1 ஆம் தேதி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மற்றும் மயிலாடுதுறைப் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 12 பேரை வேதாரண்யம் அருகே, எல்லை தாண்டி வந்த இலங்கை கடற்படையினர் கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்தனர். ஜூலை 4 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்து, காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

கடந்த ஜூலை 21 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ஒரு விசைப்படகையும், அதில் இருந்த அந்தோணி, அஜித் உள்ளிட்ட 6 மீனர்களையும் கைது செய்து இலங்கையின் வவுனியா சிறையில் அடைத்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதையும், தாக்குதலுக்கு உள்ளாவதைக் கண்டித்தும் ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும், இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜூலை 23 சனிக்கிழமை முதல் தொடங்கி உள்ளனர்.

இதில் 5 ஆயிரம் மீனவர்கள் பங்கேற்று உள்ளனர். துறைமுகத்தில் 750 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் வரை மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை அத்துமீறி நமது கடற்பரப்பில் நுழைந்து கைது செய்வதை ஒன்றிய அரசு தடுத்தி நிறுத்திடாமல் அலட்சியப்போக்குடன் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகின்றேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…