முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்!

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

கடந்த 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெற்ற நாளன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் கலவரம் வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 14பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு நேற்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 10 லட்ச ரூபாய் பிணைத்தொகை மற்றும் 15நாள் பொன்னேரி காவல் நிலையத்தில் கைழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 14பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

சிறையில் இருந்து வெளியே வந்தவர்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து சிறை வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சமூக விரோதிகளை வரவழைத்து திமுக அரசின் ஒத்துழைப்போடு ஓபிஎஸ் அராஜகத்தை அரங்கேற்றினர் என குற்றம் சாட்டினார்.

திமுக அரசு பாரபட்சத்தோடு அதிமுக தொண்டர்களை கைது செய்துள்ளது எனவும் நீதிமன்றத்தை நாடி அவர்களுக்கு பிணை பெற்று தற்போது அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஏராளமான குழுக்கள் அமைப்பதால் குழுப்பம் தான் ஏற்படும் எனவும், தாயின் கேள்விகளுக்கு பதில் சொல்ல திமுக அரசிற்கு வக்கில்லை என்றார்.

உண்மை நிலையை மக்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்துகிறது என்றார். திமுக ஆட்சிக்கு வரும் போது சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிடும் என குற்றம் சாட்டினார். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மாற்றம் செய்து பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இதற்கு பொறுப்பேற்கும் வகையில் காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சரை மாற்ற வேண்டும்.

அமைதிப்பூங்காவாக உள்ள தமிழகத்தை புரட்டி போட்டு விட்டதாகவும், காவல்துறை அரசின் கட்டுப்பாட்டில் இல்லையா என நீதிமன்றம் கேள்வி எழுப்புயிள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்தார். இது உள்துறையை வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவமானம் என்றும் இதற்கு பொறுப்பேற்று துறையை வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றார். உள்துறையை யாருக்காவது கொடுக்க வேண்டும், ஆனால் அவ்வாறு ஸ்டாலின் கொடுக்க மாட்டார்.

அதிமுக ஆட்சியில் 40 முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் பங்கேற்று சிறு வியாபாரிகள், மக்கள் பாதிக்காத வகையில் மக்கள் நலன் பாதுகாக்கும் வகையில் குரல் கொடுத்ததாக ஜெயக்குமார் தெரிவித்தார். நிதியமைச்சர் மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பவராக இருக்க வேண்டும் என்றும் அரசுக்கு வருமானம் வர வேண்டும் என பிரதிபலிப்பவராக இருந்தால் மக்களுக்கு எவ்வாறு நன்மை கிடைக்கும் என வினவினார். ஜிஎஸ்டி கவுன்சில் மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் இடம் எனவும், தற்போதைய நிதியமைச்சர் என்ன குரல் கொடுத்தார் என கேள்வி எழுப்பினார்.

வரி உயர்விற்கு எல்லாம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கை தூக்கிவிட்டு தமிழகத்திற்கு வந்து இரட்டை வேடம் போடுகிறார் நிதியமைச்சர் என சாடினார். மாநில நலனுக்கும்
ஜிஎஸ்டி கவுன்சிலில் வரி குறைப்பிற்காக குரல் கொடுத்தது குறித்து நிதியமைச்சர் சொல்ல முடியுமா என்றார். திண்டுக்கல் சீனிவாசனை வங்கி அங்கீகரித்ததா என்ற கேள்விக்கு தாங்கள் மட்டுமே உண்மையான அதிமுக எனவும் தாங்கள் நிர்ணயிப்பவரே வங்கி கணக்குகளை நிரண்யிக்கும் பொருளாளர் என்றார்.

மின்சாரம் என்பது அத்தியாவசிய தேவையான நிலையில் நிதிச்சுமை ஏற்பட்ட போதிலும் கடந்த காலங்களில் அதிமுக அரசு ஏற்றுக் கொண்டது என்றார். சொத்துவரி ஏற்றிய போதே பம்பர் பரிசு காத்திருக்கிறது என்று அதிமுக கூறியது போல தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட உள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.

வருவாயை பெருக்க கூடிய நிர்வாகத் திறமை இல்லாத ஆட்சியின் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். ஆட்சிக்கு வந்த பொருளாதார நிபுணர் குழுவை அமைத்தும் சரிவர செய்யவில்லை என்றார். அதிமுக ஆட்சியில் பொருளாதார நிபுணர்களை நியமித்தா வருவாயை பெருக்கினார்கள் என்று கேள்வி எழுப்பினார். அறிவு இருந்ததால் வருவாயை பெருக்கியதாகவும், தற்போது அறிவில்லை என்பதால் திண்டாடுவதாக சாடினார்.

Leave a Reply

Your email address will not be published.