ஆளுநர் பேச்சு ஏற்கத்தக்கது அல்ல… திமுக எம்.பி. திருச்சி சிவா ஆவேசம்!

பல்கலைக்கழக விழாவில் ஆளுநர் அவர்கள் தன் வரம்பை மீறி பேசுவது ஏற்கத்தக்கது அல்ல என நாடாளுமன்ற மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்……

தமிழக ஆளுநர் எங்கு பேசினாலும் விவாதத்திற்குரிய வகையிலேயே பேசி வருவது அவருடைய பொறுப்புக்கு உகந்தது அல்ல என சாடினார்…..

சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி திமுக இளைஞர் அணி சார்பில்
” திராவிட மாடல்” பயிற்சி பாசறை கூட்டம் இன்று மாலை சேலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், வடக்கு சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த பாசறை கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா பங்கேற்று இளைஞர் அணியினர் மத்தியில் உரையாற்றினார்.

பின்னர் அவரை சந்தித்த செய்தியாளர்கள், மதுரையில் நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அவர்கள் சனாதன தர்மம் பற்றி பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த திருச்சி சிவா அவர்கள்,

பட்டமளிப்பு விழாவில் பேசுவதற்கென்றே சில நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு வகுத்துள்ளது. எங்களைப் போன்றவர்கள் அந்த இடத்திற்கு செல்கின்ற போது நெறிமுறை மாறாமல் பேசுவதும், கடைபிடிப்பதும் பாரம்பரியமான ஒன்று.
ஆனால் தமிழக ஆளுநர் அவர்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில், அவர் வெளிப்படுத்துகின்ற கருத்துகள் எல்லாம் விவாதத்திற்கு உரியதாக மாறி வருவது. அவர் ஏற்று இருக்கின்ற பொறுப்பின் தன்மையை குறைப்பதாகவே உள்ளது.

அரசியல் சட்டம் தந்த அதிகாரத்தில் இருக்கக்கூடிய ஒருவர், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். பல்வேறு இடங்களில் , பல விவாதங்கள் முளைக்கின்ற அளவிற்கு அவருடைய வார்த்தைகளும், கருத்துக்களும் அமைந்துள்ளது . இதை பல நேரங்களில் திமுக முன்னணி தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் .

நாங்களும் கண்ணியமாகவே விளக்கம் சொல்லி வருகிறோம். ஆனால் அவர் வரைமுறைகளை கடந்து பேசி வருகிறார். குறிப்பாக பட்டமளிப்பு விழா போன்ற இடங்களில் இவ்வாறு பேசுவது ஏற்புடையது அல்ல. இதே நிலை தொடருமானால் , இந்த ஜனநாயக நாட்டில் ஒரு மிகப்பெரிய தகுதி கொண்ட பொறுப்புக்கு அது களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்து விடும் என்றார்.

இது மாணவர்களை திசை திருப்பும் நோக்கமாக கருதலாமா? என்ற கேள்விக்கு, மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் சனாதனம் பற்றி கருத்து சொல்வது, திராவிடம் பற்றி பேசுவது என்பது, அவருடைய எல்லைக்கு மீறிய வரைமுறையற்ற செயலாகும். அவ்வாறு பேசுவது ஏற்புடையதல்ல என்றார்.

பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் கலந்து கொள்ளவில்லையே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒரு மாநில கவர்னர், மாநில அரசை மதிப்பதில்லை என்கிற போது ஒரு மாநில அமைச்சர் அந்த விழாவில் கலந்து கொள்ளாததற்கு பல காரணங்கள் இருக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…