நற்பெயருக்கு களங்கம்… ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிடக் கூடாது என மீன் வலை உற்பத்தி நிறுவன நிர்வாகிக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் தொடர்ந்துள்ள வழக்கில், மகேஷ் அளித்த பொய் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்து, பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியாகி, தனது நற்பெயரும், நன்மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தன்னை பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக மான நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் வழங்கக் கோரியும், தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிடவும் தடை விதிக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துக்களை மகேஷ் வெளியிட தடை விதித்தும், வழக்கு குறித்து இரண்டு வாரங்களில் மகேஷ் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 26ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.