இரட்டை தலைமை ரத்து… அதிமுக தீர்மானம் சொல்வது என்ன?

ADMK

அதிமுகவில் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டை தலைமை உருவாக்கப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் பதவி வகித்து வந்தனர். இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை ரத்து செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கான காரணம் குறித்து அதிமுக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவெடுப்பது சம்பந்தமாக!

கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களின் உணர்விற்கும், விருப்பத்திற்கும் ஏற்பட இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வலிமை சேர்க்கப்பட்ட, அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் “கழகப் பொதுச் செயலாளர்” என்ற தலைமையை மீண்டும் உருவாக்கி, தற்பொழுது உள்ள இரட்டைத் தலைமையான கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.

1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவில், கழக சட்ட திட்டங்களில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. கழக சட்ட திட்ட விதி – 43ன்படி, “கழக சட்ட திட்ட விதிகளை இயற்றவும்-திருத்தவும்-நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகும்”. 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவில் திருத்தப்பட்ட சட்டத் திருத்தங்கள், 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் வைத்து அனுமதி பெறாததால், மேற்படி திருத்தங்கள் தானாகவே காலாவதி ஆகிவிட்டது.

இந்த காலாவதியான சட்டத் திருத்தங்கள் அனைத்தும், கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தேர்வுமுறை பற்றி தான். இந்தத் திருத்தங்கள் காலாவதியானாலும், கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவர்கள், கழகத்தின் நடைமுறையில் உள்ள சட்ட திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அவர்கள் தலைமையில் கழக அமைப்புத் தேர்தல்கள் உட்பட அனைத்து செயல்களையும் இப்பொதுக்குழு ஏற்றுக்கொள்கிறது” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.