நாளை பொதுக்குழு கூட்டம்: ஓபிஎஸ், இபிஎஸ் தீவிர ஆலோசனை!!

ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் நிர்வாகிகளுடனான ஆலோசனை இன்றும் தொடர்கிறது. திட்டமிட்டபடி நாளை பொதுக்குழு கூட்டத்தை நடத்த கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமதி இல்லத்தில் இபிஎஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். கேபி முனுசாமி செங்கோட்டையன் நத்தம் விஸ்வநாதன் பொள்ளாச்சி ஜெயராமன் காமராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இபிஎஸ் இல்லத்திற்கு வருகை தந்தனர்.
அவர்களிடம் பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து பொதுக்குழு நடைபெற உள்ள வானகரம் தனியார் திருமண மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைப் பார்வையிட இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் வானகரம் செல்ல உள்ளனர். அதேசமயம் ஓபிஎஸ் தரப்பை பொருத்தமட்டில் வைத்திலிங்கம் , மனோஜ் பாண்டியன் , வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் ஓபிஎஸ் உடன் ஆலோசனை ஈடுபட்டுள்ளனர்.
நாளை நீதிமன்ற தீர்ப்பு வெளியாகுவதைப் பொறுத்து தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக இரு நீதிபதி அமர்வுக்கு மேல்முறையீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது குறித்தும் , அதற்கான கால அவகாசம் இல்லாத சூழலில் பொதுக்குழுவில் இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் கட்சி விதியை மீறி தன்னிச்சையாக பொதுச்செயலாளர் பொறுப்பு சிலருக்கு வழங்கப்பட்டதாக கூறி உயர் நீதிமன்றத்தில் மற்றும் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், நீதிமன்றம் பொதுக்குழு நடத்த இபிஎஸ் தரப்புக்கு அனுமதி தெரிவிக்கும் பட்சத்தில் திட்டமிடப்பட்ட 16 தீர்மானங்கள் தவிர ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகளை கட்சியிலிருந்து விலக்குவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என ஓபிஎஸ் தரப்புக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தை உடனடியாக நாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.