வைரல் வீடியோவால் அதிரடி ஆய்வு செய்த அமைச்சர் நாசர்

ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பான புகாரின் அடிப்படையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா வழங்குதல், பெயர் மாற்றம், முதியோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு மனுக்களை பொதுமக்கள் அளித்து வருகின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக மனு அளித்தவர்களுக்கு ஆவடி வட்டாட்சியர் உட்பட அதிகாரிகள் எவ்வித பதிலளிக்காமல் அலட்சியப் போக்கு காட்டி வருவதாக குற்றசாட்டு எழுந்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா கேட்டு ஒரு வருடத்திற்க்கு மேலாக ஆவடி வட்டாட்சியர் அலைகழிப்பதாக பெண் ஒருவர் அழுது கொண்டே புலம்பும் வீடியோ காட்சிகள் சமூக தளத்தில் வைரலாக பரவி வந்தது.

இதனை அடுத்து ஆவடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், பால்வளத் துறை அமைச்சருமான, நாசர் ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பொது மக்கள் அளித்த மணுக்களின் எண்ணிக்கை,மற்றும் எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் எனவும் மேலும் அலட்சிய போக்குடன் செயல்படும் அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நாசர் எச்சரித்தார்.

Leave a Reply

Your email address will not be published.