ஈபிஎஸ் தான் அதிமுக பொதுச்செயலாளர்… அடித்துக்கூறிய கேபி முனுசாமி!

திட்டமிட்டபடி பொதுக்குழு கண்டிப்பாக நடக்கும் இதை யாரும் தடுக்க முடியாது என்றும், இபிஎஸ் கண்டிப்பாக பொதுச்செயலாளராக பதவி ஏற்பார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ் ஆர் கே அப்பு காட்பாடியில் ரெயில்வே மேம்பாலத்தை கடந்த ஒன்றாம் தேதி திறந்து வைத்து போராட்டம் நடத்தினார்

இதனை அடுத்து அவர் மீது 6 பிரிவுகளின் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி இன்று வேலூர் ஜெயிலில் எஸ்ஆர்கேஅப்புவை நேரில் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது; காட்பாடியில் நீண்ட காலமாக ரெயில்வே பாலத்தை திறக்காததால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.

இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்‌. அவரை வேண்டுமென்றே ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

வருகிற 11ம் தேதி அதிமுக பொது குழு திட்டமிட்டபடி நடந்தே தீரும்.எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் பொதுக்குழுவிற்கு ஏற்கனவே அனுமதி அளித்து விட்டார்.

பணம் கொடுத்து மாவட்ட செயலாளர்களை ஈபிஎஸ் வளைப்பதாக டிடிவி தினகரன் கூறிவருறார். அவருக்கு எச்சரிக்கை விடுக்கிறோம், அவர் இந்த கட்சியால் ஆதாயம் பெற்று சுபயோகத்தை அனுபவித்து கொண்டிருப்பவர் அவருக்கு கட்சியை பற்றி பேச அருகதை கிடையாது. தொடர்ந்து இதுபோல் அவர் பேசினால் வழக்கு போட்டு அவரை நீதிமன்றத்தில் நிற்க்க வைப்போம்.

வைத்தியலிங்கம் விரக்தியில் பேசி வருகிறார்.

தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளுக்காக போராடும் அதிமுகவினரை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கெல்லாம் அதிமுக ஒருபோதும் அஞ்சாது.

தமிழகத்தில் உண்மையான எதிர்க் கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது, அரசு தவறும் பட்சத்தில் மக்கள் பிரச்சினையில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் ஈடுபடுவோம்.

சசிகலா பாவம் நானும் இருக்கிறேன் என பேசி வருகிறார் அவரை பற்றி பேச அவசியம் இல்லை. கட்சியில் உண்மையாக உழைக்கின்றவர்களை இயக்கத்தின் மீது பாசமும் பற்றும் கொண்டிருப்பவர்களை யாராலும் பிரிக்க முடியாது கட்சியிலிருந்து வெளியேற்றவும் முடியாது.

அதிமுகவில் யாரும் யாரையும் நீக்க முடியாது என்ற சசிகலாவின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த முனுசாமி

இவர்கள் எல்லாம் கட்சியிலும் ஆட்சியிலும் ஆதாயம் தேடிய சந்தர்ப்பவாதிகள், தற்போது ஆதாயம் போய்விட்டதே என்பதால் இது போன்ற பிதற்றல்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.