பொதுக்குழு விவகாரம்: அதிமுகவின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை!!

கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் என்பது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் வரும் காலங்களில் அதிமுகவில் ஒற்றை தலைமை தான் இருக்க வேண்டும் என்று போஸ்டர்கள் மற்றும் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இல்லை என்றும் அவருடைய பதவி காலாவதி ஆகி விட்டதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அதே சமயத்தில் தலைமை கழகம் அழைப்பு என்ற பெயரில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பது ஏற்புடையது அல்ல என்று ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்ட நிலையில் தற்போது உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.
குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு முன் இந்த வழக்கு விசாரணை நடைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீராம் வாதத்தை முன்வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுக் குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என உயர் நீதிமன்றம் தெரிவித்த நிலையில் அவைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சண்முகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.