பொதுக் குழு கூட்டம்: ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு உரிமையியல் நீதிமன்றம் கெடு!!
அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை கலைத்துவிட்டு ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை உரிய நடைமுறைகள் பின்பற்றாமல் நடத்தியதாகவும் இதனால் இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் ஜூன் 23-ஆம் தேதி நடைப்பெற இருந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க கேட்டு கூடுதல் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் ஜூலை 11-ஆம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று கட்சித் தலைமை அறிவித்திருந்தது.
இதனிடையே கட்சி நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்து வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக அடுத்த பொதுக்குழு கூட்டம் அழைக்கப்பட்டதாகவும் இதனால் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை தடை விதிக்க வேண்டும் என்று சூரியமூர்த்தி கூடுதலாக மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தாமோதரன் இது தொடர்பாக ஜூலை 4-ஆம் தேதிக்கு பதில் அளிக்க வேண்டும் என்று ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு உத்தரவிட்டுள்ளார்.