ஒப்பந்த தொழிலாளர் பலி! தமிழக முதல்வர் ரூ.15 லட்சம் நிவாரணம்…
சென்னை மாதவரத்தில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி ஒருவர் மரணம் அடைந்த நிலையில் மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாதவரம் முத்து மாரியம்மன் கோயில் தெருவில் ஜெட்ராடு இயந்திரம் மூலமாக பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த நெல்சன் மற்றும் ரவிகுமார் என்பவர்கள் சென்றனர். பாதாள சாக்கடையின் மேல் மூடியை நெல்சன் திறந்து உள்ளே பார்த்த பொழுது எதிர்பாராத விதமாக சாக்கடையிலிருந்த விஷவாயு அவரைத் தாக்கியது.
இதில் மூச்சு திணறல் ஏற்பட்டதால் மயங்கிய நிலையில் நெல்சன் சாக்கடையில் விழுந்ததாக தெரிகிறது. அப்போது அவருடன் வேலை செய்த ரவிக்குமார் செய்வதறியாமல் உள்ளே எட்டிப் பார்த்த பொழுது அவரையும் விஷவாயு தாக்கி ரவிக்குமாரும் சாக்கடையில் விழுந்தார்.
இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் உடனே காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இருவரையும் காப்பாற்ற போராடிய பொழுது நெல்சன் சடலமாக மீட்கப்பட்டார். அதே போல் ரவிக்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உயிரிழந்த தொழிலாளி நெல்சன் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.