ஆன்லைன் ரம்மிக்கு ஆப்பு… முதல்வர் கைக்குப்போன முக்கிய அறிக்கை!
ஆன்லைன் ரம்மி விளையாடுவோரின் திறன்கள் மேம்படுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறு என முதலமைச்சர் ஸ்டாலினிடம் பரிந்துரை குழு அறிக்கை அளித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது தொடர்பாக பரிந்துரைகளை அளிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து 71 பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அதில், ஆன்லைன் ரம்மி விளையாடுவோரின் திறன்கள் மேம்படுவதாக கூறுவது முற்றிலும் தவறு என்றும், இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை முறைப்படுத்த முடியாது என்பதால், இதனை தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும்,
ஏற்கனவே கொண்டுவரப்பட்ட சட்டத்தை கைவிட்டு, புதிய சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையில், மத்திய அரசு தேசிய அளவில் ஒருசட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ள பரிந்துரை குழு, பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் செயல்படுவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.