பொதுக்குழுவில் இருந்து ஆவேசமாக வெளியேறிய ஓபிஎஸ்… கொந்தளிப்பில் தொண்டர்கள்!

பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதமாக நடைபெறுவதாக கூறி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே அரங்கை விட்டு வெளியேறினார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில நாட்களாகவே வலுத்து வந்த நிலையில், இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை விட சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அதேபோல் மேடையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், வளர்மதி மற்றும் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் ஒற்றைத் தலைமை மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசினர். இதனை ஆதரிக்கும் விதமாகவும், எதிர்க்கும் விதமாகவும் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதனிடையே பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்து விட்டதாகவும், ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றும் தெரிவித்தார். .

எனவே அடுத்த எப்போது செயற்குழு- பொதுக்குழு கூடும் என்பதை விரைவில் அறிவிப்போம் என்றும், அதில் ஒற்றைத்தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கே.பி.முனுசாமி குறிப்பிட்டார்.

இதனையடுத்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி காலை 9.30 மணி அளவில் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமைக்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இந்த பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதமானது எனக்கூறி வெளிநடப்பு செய்தனர். மேடையில் இருந்த ஓ.பன்னீர்செல்வமும் ஆவேசத்துடன் அவையை விட்டு வெளியேறினார். மேடையில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என ஆவேசமாக தெரிவித்துவிட்டு வெளியேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *