ஆடையை கிழித்து, அத்துமீறி நடந்த போலீஸ்… எம்.பி. ஜோதிமணி ஆவேசம்!

jyothimani

நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் மூன்றாவது நாளாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆஜரான நிலையில், இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக தொடுக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தலைவர்களை டெல்லி காவல்துறை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகிறது. அமைதி போராட்டம் நடத்தும் எங்கள் மீது காவல்துறை அராஜகமாகத் தாக்குதல் நடத்தி கைது செய்வதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர் புகார்களை எழுப்பி வருகின்றனர். தங்கள் இரு நாள்களுக்கு முன்னர் காவல்துறை நடவடிக்கையின் போது முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்துக்கு அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளிவந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, டெல்லி காவல்துறை தன்னை கிரிமினல் போல கைது செய்து ஆடை கிழித்துள்ளதாக புகார் அளித்துள்ளார். கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட போது வீடியோ பதிவு எடுத்து வெளியிட்டுள்ள ஜோதிமணி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு இந்த புகாரை அளித்துள்ளார்.

அதில், ‘டெல்லி காவல்துறை மிக மோசமாக தாக்கி எனது ஆடையை கிழித்து வரம்பு மீறி கைது செய்து ஏதோ ஒரு இடத்திற்கு கொண்டு செல்கிறார்கள். ஒரு மணி நேரமாக தாகம் என தண்ணீர் கேட்டு வரும் எங்களுக்கு தண்ணீர் கூட தர மறுக்கிறார்கள்.கடையில் கூட தண்ணீர் வாங்கிக்கொள்ள அனுமதிக்கவில்லை. ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது யாருக்கும் நேரக்கூடாது. எனவே, இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வீடியோ பதிவில் புகார் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *