கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு… அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் நீராடிய திருமுக்குளம் சீரமைக்கப்படும் மற்றும் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வுகளை மேற்கொண்டதோடு, ஜீயருடனுன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வில் அமைச்சர் பேசும்போது தெரிவித்ததாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் துறை சார்ந்த பக்தர்கள் நல திட்டங்கள் தொடர்பாகவும், திருக்கோயில்கள் வளர்ச்சிக்காக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம், கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்பு, 100-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் குடமுழுக்கு, பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருத்தேர்களை பழுதுபார்த்து வீதி உலா, திருக்குளங்களை புனரமைத்தல், திருக்கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கோயிலில் ஆண்டாள் நீராடிய திருமுக்குளம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும். திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை கையகப்படுத்துதல் மற்றும் கோயில் நிர்வாக பணிகள் தொடர்பாக ஸ்ரீஸ்ரீசடகோப ராமானுஜர் ஜீயர் அவர்கள் மற்றும் திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த சட்டமன்ற மானியக் கோரிக்கையில் 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை பாதுகாக்கும் வகையில் சுமார் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்தார்கள். அதன்படி தமிழகத்தில் உள்ள பழமையான திருக்கோயில்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வருகையை அதிகப்படுத்தவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
அதனை தொடர்ந்து, 12 முக்கிய திருக்கோயில்களில் மாதந்தோறும் பௌர்ணமி தினங்களில் 108 திருவிளக்கு பூஜைத் திட்டத்தினை தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம், முத்தாரம்மன் திருக்கோயிலில் தொடங்கி வைக்கப்படவுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.