முதல்வரே உடனே பதில் சொல்லுங்க; அவசர வேண்டுகோள் வைத்த திருமா!

சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க சட்டம் இயற்றுவது தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்

சாதிய மதவாத வன் கொடுமைகளை தடுக்க தனி உளவு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார்.

சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரத்தில் உண்மையை கண்டறிய உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிடவேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளன்:-

சமூகம், அரசியல், பண்பாடு போன்ற தளங்களில் சிறப்பாக செயல்பட்டவர்களை தேர்வு செய்து , விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த திருமாவளவன், இந்தாண்டு புதிதாக கார்ல் மார்க்ஸ் பெயரில் மார்கஸ் மாமணி விருது வழங்கப்படும் என தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2022 ஆம் ஆண்டுக்கான விருதுகள் பெறுபவர்களுக்கான பட்டியலை அறிவித்த திருமாவளவன், அம்பேத்கர் சுடர் விருது, கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு வழங்கப்படும் எனவும்,
பெரியார் ஒளி விருது எழுத்தாளர் எஸ்.வி ராஜதுரைக்கும்,காயிதே மில்லத் பிறை விருது எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த தெகலான் பாகவிக்கு வழங்கப்படும் என கூறினார்.

அதேபோல் காமராஜர் கதிர் விருது தொழிலதிபர் வி.ஜிசந்தோசத்திற்கு வழங்கப்படும் எனவும் அயோத்தி தாசர் ஆதவன் விருது முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி எஸ்.செல்லப்பனுக்கு வழங்கப்படும் எனவும் கூறினார்.
செம்மொழி ஞாயிறு விருது தொல்லியல் அறிஞர் க.ராஜனுக்கும்
மார்க்ஸ் மாமணி விருதுமறைந்த எழுத்தாளர் ஜவகருக்கு வழங்கப்படும் எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.

விருதாளர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

சனாதன அரசியலை எதிர்த்து பேசுவதாலும் கருத்தியல் சார்ந்த விமர்சனங்களை முன் வைப்பதாலும் ஆர்.எஸ்.எஸ் போக்குகளை அம்பலப்படுத்தவதாலும் சித்தராமையாவுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

கண்ணகி முருகேசன் ஆணவ படுகொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருப்பது ஆறுதல் அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்தார். நீதிமன்ற தீர்ப்புக்கு தலை வனங்குவதாக தெரிவித்தார்.

ஆணவப்படுகொலைகளை தடுப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் சட்டம் கொண்டு வரவேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார்.

சாதி ஆணவப்படுகொலைகளை தடுப்பதற்கு சட்டம் இயற்றிட மத்திய அரசு,மாநில அரசுகளுக்கு கருத்துகளை தெரிவிக்க கடிதம் எழுதி இருப்பதாக குறிப்பிட்ட திருமாவளவன்,அதற்கு இதுவரை தமிழ்நாடு அரசு கருத்து தெரிவிக்கவில்லை எனவும் உடனடியாக ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பட்டியல் இன மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்கவும் சாதி படுகொலைகளை தடுக்கவும் தமிழக அரசுக்கு கூடுதல் அக்கறை இருப்பதாக தாங்கள் நம்புவதாக தெரிவித்தார்.

நக்சல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு கியூ பிரிவு உளவு அமைப்பு இருப்பதுபோல் சாதிய மதவாத வன் கொடுமைகளை தடுக்க தனி உளவு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அரசு மழலையர் பள்ளிகள் மூடப்படும் என பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு,
அரசுக்கு எந்த அளவு பொருளாதார நெருக்கடி இருந்தாலும், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அரசு கல்வி நிறுவனங்களை மூடாகூடாது என தெரிவித்தார்.

தனியார் நிறுவனங்களை அரசுடமையாக்குவது தான் ஒரு நல்ல அரசுக்கு அழகு இலக்கணம் என தெரிவித்த அவர் அரசு கல்வி நிறுவனங்களை பொருளாதார காரணம் காட்டி மூடுவது என்பது தனியார்மயப்படுத்தலை ஊக்கப்படுத்துவது போல் அமையும் என சுட்டி காட்டினார்.

பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட
சங்பரிவார் அமைப்புகளின் வெறுப்பு அரசியல் உலக அளவில் நமக்கு எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நபிகள் நாயகம் தொடர்பாக கொச்சைப்படுத்தும் வகையில் தெரிவித்த விமர்சனத்திற்கு இஸ்லாமிய நாடுகள் வெளிப்படுத்தியுள்ளது எதிர்ப்பில் இருந்து புரிந்து கொள்ளலாம் என கூறினார்.

அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒருமித்த குரல் எழுப்பி உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பின்வாங்குவதாகவும் தாங்கள் பிற மதங்களை மதிப்போம் என நாடகம் ஆடுவதாகவும் அப்பட்டமாக பொய்யை பேசுவதாகவும் விமர்சித்தார்.இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்து சமய அறநிலையத்துறை தங்களை கட்டுப்படுத்தாது என உயர் நீதிமன்ற உச்சநீதிமன்றங்களில் தீர்ப்பு வாங்கி உள்ளதாக சிதம்பரம் தீட்சிதர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனால் சிதம்பரம் கோயிலில் இந்து அறநிலைய துறை ஆய்வு செய்ய கூடாது என அவர்கள் தடுப்பதாக கூறிய திருமாவளவன்,
இது குறித்து உண்மை அறிய உயர் நீதிமன்றம் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, சிதம்பரம் தீட்சிதர்கள் தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்ய தமிழ்நாட்டு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *