இரட்டை வேஷம் போடுவது ஏன்?… திமுக அரசுக்கு எதிராக திருமுருகன் காந்தி ஆவேசம்!
தமிழர்களுக்கு செலுத்தக்கூடிய நினைவேந்தலுக்கு ஏன் அரசு அனுமதி மறுக்கிறது என்றும் தொடர்ந்து தி.மு.க அரசு தமிழர்கள் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாக மே.17 இயக்க திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
மே 17 இயக்கம் சார்பாக பெசன்ட் நகரில், 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இணைப்புக்களும் செய்யப்பட்டதன் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மே 17 இயக்கத்தினர் தடையை மீறி 500ககும் மேற்பட்டோர் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர்..
நினைவேந்தல் நிகழ்ச்சியில் பறை இசை முழங்க அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து உயிரிழந்த தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் காந்தி: இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு, நினைவேந்தல் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. நீர்நிலை அருகே இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். அதேபோல் கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வந்திருக்கிறோம். கடந்த ஆண்டுகளில் மிக அமைதியாக நினைவேந்தல் நடந்திருக்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் தடைசெய்யப்பட்டது. அதை மீறி நடத்தி இருக்கிறோம்.இந்த ஆண்டு நினைவேந்தல் நடத்த அனுமதி கேட்டபோது, பெசண்ட் நகர் பகுதியில் இடம் கொடுப்பதாக காவல் துறை தெரிவித்தது. அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று காலை திடீரென அனுமதி கிடையாது என்று அரசு அறிவித்திருக்கிறது. இது அதிர்ச்சியளிக்கிறது.மக்களுக்கு நினைவேந்தல் நடத்துவது அடிப்படை உரிமை. அதை தடுக்க எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது. இது ஒரு பண்பாட்டு நிகழ்வு. அரசியல் நிகழ்வு அல்ல.
அதிமுக அரசு எடுத்த அதே நிலைப்பாட்டை திமுக எடுத்திருப்பது ஜனநாயக படுகொலை. திமுக இத்தகைய தடையை கொண்டு வரும் என எதிர்பார்க்க வில்லை. இது மனித உரிமை மீறல். தமிழகத்தில் அந்த மக்களுக்கு நினைவேந்தல் நடத்த முடியவில்லை என்றால், வேறு எங்கு நடத்துவது.
இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதில் அரசிற்கு என்ன சிக்கல்? நெருக்கடி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? இதை ஏன் தடுக்கிறீர்கள்? இதை தமிழக அரசே நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம். ஏன் மெழுகு வர்த்தி ஏந்தி நினைவேந்தல் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது என முதல்வர் விளக்கம் கொடுக்க வேண்டும்.
அதிமுக ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டதால் தான், திமுகவை மக்கள் ஆட்சிக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். மத்திய அரசு சொல்வதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுகிறதா? ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான நிலைப்பாட்டை தமிழ்நாட்டு முதல்வர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும், விநாயகர் சிலையை கடலில் கரைக்க அவ்வளவு பாதுக்காப்பு, ஏற்பாடுகள் அரசு செய்யும் போது, நினைவேந்தலுக்கு ஏன் அரசு அனுமதி மறுக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன், விசிக கட்சியை சார்ந்த வன்னியரசு, உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் இறுதியில் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்…