ஓராண்டு நிறைவு… பேரவையில் ஒரு மணி நேரம் உரையாற்றிய ஸ்டாலின்!
காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் வழி நின்று கடமையாற்றுவேன்…. பாராட்டியவர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய முதலலைமைச்சர்…
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள், சபாநாயகர் உள்ளிட்டோர் அரசை பாராட்டி பேசினர்.
இறுதியாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள நிலையில் தங்கள் அனுமதியோடு 110 விதியை பயன்படுத்தி நாம் சில கருத்துக்களைத் அவையில் பேசியிருக்கிறேன்.
அதை ஒட்டி தொடர்ந்து நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய பல்வேறு பணிகள் குறித்தும் பல திட்டங்களை அறிவித்திருக்கிறோம். அதையொட்டி எதிர்க்கட்சி வரிசையில் முன்வரிசை உட்கார்ந்து இருக்கக்கூடிய நம்முடைய தலைவர்கள் உறுப்பினர்கள் மிகச் சிறப்பான வகையில் அதை வரவேற்று எனக்கு வாழ்த்துச் சொல்லி அரசுக்கு பாராட்டு தெரிவித்து உரையாற்றி இருக்கிறார்கள். நம்முடைய பேரவை தலைவரும் பாராட்டியிருக்கிறார்.
வாழ்த்திய அனைவருக்கும் நான் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த முதலமைச்சர் பதவி என்பது என்னை பொறுத்தவரை கலைஞர் கூறியது போல தான். பதவியை பதவியாக பார்க்காதே, பொறுப்பாக பார் அப்போது தான் பொறுப்போடு பணியாற்ற முடியும் என்று அடிக்கடி எனக்கு அறிவுரை சொல்லி இருக்கிறார். ஆகவே தான் அதை பொறுப்பாக கருதி பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.
இந்த இடத்தில் முதலமைச்சராக இருந்து ஆட்சியை நடத்தி, சமுதாயத்திற்காக, இந்த நாட்டுக்காக வாழ்ந்திருக்கக்கூடிய பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், கலைஞருடைய இனிய நண்பராக இருந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆகியோர் ஆற்றிய பணியை ஒரு போதும் மறந்துவிட மாட்டேன்.
அவர்கள் வழியில் நானும் நின்று என்னுடைய கடமையாற்றுவேன். ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்று சொன்னால் உங்களில் ஒருவனாக இருந்து கடமையை ஆற்றுவேன்”, என பேசி வாழ்த்திய உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.