எங்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டாம்… குடியரசுத் தலைவருக்கு பறந்த கோரிக்கை!

மாணவர்களிடையே மதவாதத்தை திணிக்க நினைக்கும் தமிழக ஆளுநரை ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என குடியரசு தலைவருக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை வைத்துள்ளார்.


நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய THE LURKING HYDRA புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி மேடையில் பேசுகையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என்று கூறிய ஆளுநர், இவர்கள் மாணவர்களை போலவும், மனித உரிமை இயக்கம் போலவும் அரசியல் இயக்கம் போலவும் முகமூடிகளை அணிந்து கொண்டு நம் நாட்டில் இயங்கி வருவதாகவும், மேலும் தீவிரவாத இயக்கங்களுக்கு ஒரு பின்புலமாக செயல்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். பல நாடுகளுக்கு தீவிரவாதத்திற்கு ஆட்களை அனுப்பும் இயக்கமாகவும் உள்ளது என்ற குற்றச்சாட்டை தெரிவித்தார்.

ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருந்து கொண்டு மக்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் செயலில் தொடர்ந்து ஆளுநர். ஆர்.என்.ரவி ஈடுபட்டு வருகிறார். அயோத்தி வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்களை சென்னை கிண்டி ஆளுநர் மாளிகைக்கு அழைத்து விருந்து அளிப்பதா ஆளுநரின் பணி, ஆளுநர் மாளிகை என்ன சாமியார் மடமா, இந்துத்துவா கொள்கையை தூக்கி பிடிக்க நினைக்கும் ஆளுநரின் செயல் தமிழகத்தில் ஒரு போதும் எடுபடாது.

தமிழகத்தில் அண்ணன், தம்பிகளாய், மாமன், மச்சான், அக்கா, தங்கை என தொப்புள் கொடி உறவுகளாக இங்கு இஸ்லாமியர்களும் இந்து சகோதரர்களும் வாழ்ந்து வருகிறார்கள். இந்த உறவில் விரிசல் ஏற்படுத்த நினைத்த மதவாத சக்திகளின் முயற்சி என்பது பலமுறை தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதே பாணியை தற்போது ஆளுநர் மூலம் மத்திய அரசு நிறைவேற்றிவிடலாம் என நினைத்தால், மீண்டும் மீண்டும் தோல்வி மட்டுமே தமிழக மக்கள் உங்களுக்கு பரிசாக அளிப்பார்கள் என்பதை உறுதியோடு தெரிவித்து கொள்கிறேன்.

ஆளுநராக ஆர்.என்.ரவி தமிழகத்திற்கு நியமிக்கப்பட்டதற்கு காரணம் என்ன என்பது இப்போது தமிழக மக்களுக்கு தெரிய தொடங்கிவிட்டது. காவி முகமூடி போட்டு கொண்டு, ஆளுநர் போர்வையில் வலம் வரும் ஆர்.என்.ரவியை உடனடியாக தமிழகத்தில் திரும்ப பெற வேண்டுமென குடியரசு தலைவர்கள் அவர்களை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டு கொள்கிறேன்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்த இந்துக்களின் உடல்களை உறவினர்கள் கூட தொட மறுத்து போது, தங்களை உயிரை துச்சம் என நினைத்து, கொரோனாவால் உயிரிழந்த ஆயிரகணக்கான இந்துக்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியை செய்தவர்கள் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தோழர்கள்.

அதே போன்று 2015-ம் ஆண்டு சென்னை பெருவெள்ளம் உள்பட பல்வேறு பேரிடர் காலங்களில் தங்களை உயிரை பணயம் வைத்து, நிவாரண பணிகளையும், உணவு, உடை இன்றி தவித்த மக்களுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா செய்த பணி என்பது எல்லாம் ஆளுநர் ஆர்.என்.ரவி போன்றவர்களுக்கு எல்லாம் தெரிய வாய்பில்லை.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவி தனது கருத்தை திரும்ப பெற வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக்கொள்வதோடு, எந்த வெறுப்பு விருப்பும் இன்றி நடுநிலையோடு செயல்படுவேன் என தன் ஏற்று கொண்ட உறுதிமொழியை மீறியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி இனியும் அந்த பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார்.

தானாக முன்வந்து தனது பதவியை ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்ய வேண்டும், மாணவர்கள் மற்றும் மக்களிடையே மதபிரிவினை ஏற்படுத்தும் வகையில் பொதுமேடையில் பேசியுள்ள ஆர்.என்.ரவியை ஆளுநர் பதவியிலிருந்து குடியரசு தலைவர் திரும்ப பெற வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *