கேட்க யாருமே இல்லையா?… வானதி சீனிவாசனின் ‘ரத்தம், தக்காளி சட்னி மூமெண்ட்’!

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “தஞ்சை மாவட்டம், மைக்கேல்பட்டி, தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த அரியலூர் மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பினர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் இல்லம் முன்பு நேற்று (பிப்.14) அறப்போராட்டம் நடத்தினர்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமையின்படி ஜனநாயக வழியில் போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து நள்ளிரவு வரை அலைக்கழித்துள்ளனர். ஏபிவிபி மாணவர் அமைப்பின் தலைவர்கள் உள்ளிட்ட 33 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது. அமைதியான வழியில் போராடிய மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இதேசமயத்தில் நீட் தேர்வு விலக்கு குறித்த மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிய விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போதும் இதேபோன்று மாணவர் அமைப்பினர் நீதி கேட்டு, ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர். இதனை பாஜகவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் இப்போது தடையை மீறி முதல்வர் வீட்டை நோக்கி ஓடிய ஏபிவிபி மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டதற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். “உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?” என சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…