ஆளுநருக்கு நெருக்கடி கொடுக்க அதிரடி ஸ்கெட்ச் போட்ட திமுக… அமோதித்த கட்சிகள்!

நீட் தேர்விலிருந்து விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற, ஆளுநர் மூலம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதென தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பான சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்து, ஆளுநர் சட்டமுன்வடிவினைத் திருப்பி அனுப்பி வைத்துள்ள நிலையில், இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, இந்திய தேசிய காங்கிரஸ் செல்வப்பெருந்தகை, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திரு. டி. இராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் வீ.பி. நாகைமாலி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஏ.ஆர். ரகுராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எம். சிந்தனைச்செல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள், நீட் தேர்வு விலக்கு தொடர்பான வரைவுத் தீர்மானத்தினை முன்மொழிந்தார். இதையடுத்து, கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, நீட் தேர்வு விலக்கு கோரி தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களது முழு ஒத்துழைப்பை நல்குவதாகத் தெரிவித்தார்கள்.

இதனையடுத்து மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏழை, நடுத்தர மாணவர்களின் நலனைப் பாதுகாக்கவும், மாநில அரசுகளின் உரிமையை மீட்டெடுக்கவும், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதே தீர்வாக அமையும் என்ற அடிப்படையில், சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்வு குறித்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து தெளிவாக விவாதித்து, சரியான வாதங்களை எடுத்துரைத்து, இந்தச் சட்டமுன்வடிவை மீண்டும் நிறைவேற்றி, மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு மீண்டும் அனுப்புவது என இந்தச் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…