#GetOutRavi ஆளுநர் என்றும் பாராமால்… ஆளாளுக்கு வச்சி செய்யும் நெட்டிசன்கள்!

நீட் தேர்வு தொடர்பான மசோதாவை தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியதை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்ட முன்வடிவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த சட்ட முன்வடிவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கு அனுப்பி வைக்காத நிலையில் இதனை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

இறுதி வரை இந்த சட்ட முன்வடிவு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படாத நிலையில், அந்த சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சட்டமன்ற பேரவை தலைவர் அவர்களுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரியும் இது தொடர்பாக மாநில அரசு அமைத்திருந்த உயர்மட்ட ஆய்வுக் குழுவின் அறிக்கையை ஆளுநர் விரிவாக ஆராய்ந்தார்.இந்த மசோதா ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிராகவே உள்ளது.எனவே, இந்த மசோதாவை ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கே திரும்பி அனுப்பியுள்ளார்.மேலும் நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்ய வேண்டும்.” என்று கூறியது.

இதையடுத்து ஆளுநர் நீட் தேர்வு மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்தும், அடுத்த கட்டமாக அனைத்து கட்சிகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும் நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக #GetoutRavi, #StateRights #BANNEET போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. மருத்துவ கனவோடு போராடி, நீட் தேர்வுக்கு முன்னால் தோற்று ஏராளமான மாணவ, மாணவிகள் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து மாண்டுள்ளனர். இதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் ஆளுநர் செய்துள்ள செயலுக்கு சோசியல் மீடியாவில் எதிர்ப்பு கிளப்பியுள்ளது.

#GetoutRavi என்ற ஹேஷ்டேக்கில் விதமான மீம்ஸ்களை போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தமிழ்நாட்டிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டாம் என்றும், அவர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் ஏராளமான கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *