சேகர் ரெட்டியின் டைரி விவகாரம் – இபிஎஸ், ஓபிஎஸ்க்கு சம்மன்

கடந்த 2017ம் ஆண்டு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரும், தொழில் அதிபருமான சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர் .அவருக்கு சொந்தமான சென்னை, வேலூர் மற்றும் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் ரூபாய் 147 கோடியும், 175 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
கிடைத்த 147 கோடி ரூபாயில் 34 கோடி ரூபாய் இரண்டாயிரம் நோட்டுகளாக இருந்தன. புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக புழக்கத்திற்கு வருவதற்கு முன்பே அவரிடம் அவ்ளோ பணம் எப்படி வந்தது என்ற கேள்விகளை வருமான வரித்துறையினர் எழுப்பினர். பின்,சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்துள்ளதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சேகர் ரெட்டியின் மீது வழக்கு பதிவு செய்தது.
சேகர் ரெட்டி மீது சிபிஐ தொடர்ந்த வழக்குகளில் சரியான ஆதாரங்கள் இல்லை என்று அவரை விடுவித்தது. இந்நிலையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் டைரி ஒன்று கிடைத்தது. அதில் முன்னாள் முதலமைச் சர் எடப்பாடி பழனிசாமி,ஓ. பன்னீர்செல்வம்,மற்றும் அதிமுக முன்னால் அமைச்சர்களான ஜெயக்குமார்,செல்லூர் ராஜூ உட்பட பன்னிரண்டு அமைச்சர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக விவரங்கள் அந்த டைரியில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.இது குறித்து விளக்கம் அளிக்குமாறு முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டைரியில் இருந்த 12 பேருக்கும் வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும் அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்து தற்போது அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியின் பெயரும் அந்த டைரியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது .அதனால் அவரிடமும் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளதாக வருமான வரி துறையினர் தெரிவித்துள்ளனர்.