தமிழர்களை சீண்டினால்.. எச்சரிக்கும் வேல்முருகன்!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் புதிய தடுப்பணை ஒன்றினை கட்ட முயன்றுவருகிறது கர்நாடக அரசு. ஆனால், தடுப்பணை கட்டப்பட தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன தமிழக, புதுச்சேரி அரசுகள். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டமும் கூட்டப்பட்டு அதில் நிறைவேற்றப்பட்ட மேகதாது தடுப்பணை கட்ட எதிர்ப்பு உள்ளிட்ட தீர்மானங்களை நேரில் மத்திய அரசிடம் அளித்திட டெல்லி சென்றுள்ளது அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழு.
முன்னதாக, கர்நாடகாவில் இம்மாதிரியான காவிரி தொடர்பான சிக்கல்களின் போதெல்லாம் வாட்டாள் நாகராஜ் போன்ற தீவிர இனவாதம் பேசுகிற நபர்கள் தமிழர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை, தமிழ் எழுத்துக்களை அழிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இது குறித்து பேசியுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், மேகதாது தடுப்பணை விவகாரத்தை நாங்கள் ஜனநாயக ரீதியாகவே அணுக நினைக்கிறோம். அதே சமயம், இந்த சிக்கலை முன்வைத்து கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மீது சிறு கீறல் கூட விழுமேயானால், அதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி எதிர்வினையாற்றும் என தெரிவித்துள்ளார்.