குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை – சரத் பவார்!

எதிர்வரும் 2022ல் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தமக்கு இல்லை என தெரிவித்துள்ளார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார்.
மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான மாநில கட்சிகளுக்கு (திமுக, திரிணாமூல் காங்கிரஸ்) தேர்தல் உத்தி வகுப்பாளராக செயல்பட்ட பிரஷாந்த் கிஷோர், கடந்த சில நாட்களில் தொடர்ச்சியாக இரு முறை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருடன் ஆலோசனை நடத்தியதனை தொடர்ந்து அடுத்த வருடம் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவான வேட்பாளராக சரத் பவார் நிறுத்தப்படலாம். அப்படி பொது வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டால் நாடு முழுவதும் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக உள்ள மாநில கட்சிகள் சரத் பவாருக்கு ஆதவளிக்கலாம் என்ற செய்திகள் கசியத்தொடங்கின.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை எனவும், நாடாளுமன்றத்தில் பலம் தெளிவானது எனவும் தெரிவித்துள்ளார் சரத் பவார் .