தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி – திரி கொளுத்தும் கேஎஸ் அழகிரி!

தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைய காங்கிரஸ் தொண்டர்கள் பணியாற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான இன்று, சென்னையிலுள்ள காமராஜர் அரங்கத்தில் பெருந்தலைவர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி, தமிழகத்தில் மீண்டும் காமராஜர் – காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர நாம் பாடுபட வேண்டும். நமது இலக்கு குறுகியதாக இருக்க கூடாது. திமுக கூட்டணியில் நாம் இருந்தாலும் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் வகையில் நாம் பாடுபட வேண்டும். திமுக அவர்களது கொள்கைகளை பேசுகிறார்கள். நாம் நமது வெற்றிக்காக உழைப்போம் என பேசியுள்ளார்.

தமிழகத்தில் திமுகவோடு கூட்டணி வைத்ததன் காரணத்தினாலேயே காங்கிரஸ் கட்சி கடந்த 2019 மக்களவை தேர்தலிலும், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றி பெற்றது. உண்மை நிலை இப்படியிருக்க நமது கூட்டணியில் இருந்துகொண்டே இப்படி பேசுவதா என சமூகவலைத்தளங்களில் அழகிரியின் கருத்துக்கு திமுகவினர் காட்டமாக பதிலளித்து வருகின்றனர்.
முன்னதாக, சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளின் போது காங்கிரஸ் கட்சிக்கு உரிய மரியாதையுடன் பேச்சுவார்த்தைகளில் தாங்கள் நடத்தப்படவில்லை என அழகிரி காங்கிரஸ் முன்னணி தலைவர்களிடம் கண்ணீர் உகுத்ததாக அப்போது செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.