பார்ப்பன நாளேடு.. திசைதிருப்பும் உத்தி – கொங்குநாடு சர்ச்சை குறித்து வீரமணி அறிக்கை!

தமிழகத்தின் கோயம்புத்தூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட கொங்கு பகுதிகளை தமிழகத்திலிருந்து பிரித்து தனி மாநிலமாக உருவாக்க வேண்டுமென பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டுவரக்கூடிய சூழலில், பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் எழுப்பும் ‘கொங்கு நாடு’ தனி மாநில கோரிக்கை குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், பெட்ரோல், டீசல் விலையேற்றம், கொரோனோவில் ஒன்றிய அரசின் செயல்பாடு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் மீதான விவாதங்களை திசை திருப்பும் உத்தியாக கொங்கு நாடு சர்ச்சையை பார்ப்பன நாளேடு துவக்கிவைத்திருப்பதாகவும், தேவையின்றி தமிழ்நாட்டு மக்களிடையே மதவெறி – ஜாதி வெறியை தூண்டி வெற்றியடையாளமென வீண் கனவு காணாதீர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தின் கொங்கு பகுதிகளை தனியாக பிரித்து கொங்குநாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக முன்னணி தமிழ் நாளிதழ்களில் ஒன்றான தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.