தலையைக் கொடுத்தேனும் தமிழகம் காப்போம் – நாஞ்சில் சம்பத்!

தமிழகத்திலிருந்து கொங்கு பகுதிகளை பிரிக்க, மத்திய அரசு முயலுமேயானால் அதனை என்ன விலை கொடுத்தேனும் தடுப்போமென தெரிவித்துள்ளார் திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு, தொடர்ச்சியாக மத்திய அரசை, ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வருகிறது. அதோடு, திமுக ஆட்சி அமைத்ததன் பின்னர் நடைபெற்ற முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம் பெறாதது மகிழ்ச்சியென திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈஸ்வரன் என்ற சட்டமன்ற உறுப்பினர் பேசியதையும் திமுக கண்டிக்கவில்லை.
திமுகவின் இத்தகைய செயற்பாடுகளெல்லாம் தமிழகத்தில் தேசத்துக்கு எதிரான பிரிவினைவாத எண்ணங்களையே உருவாக்கும் என தெரிவித்துவந்த தமிழக பாஜக, இது குறித்து டெல்லிக்கு தெரியப்படுத்தியதாகவும் அதனடிப்படையிலேயே சில தினங்களுக்கு முன்னதாக இணையமைச்சர் பொறுப்பேற்ற எல்.முருகனது சுய விவர குறிப்பிலும், அவரது மாவட்டத்தை குறிப்பிடுவதற்கு பதிலாக ‘கொங்கு நாடு’ என இடம்பெற்றிருந்ததாக தெரிகிறது.
அதனையொட்டியே, கொங்கு பகுதிகளை தமிழகத்திலிருந்து தனியாக பிரித்து தனி யூனியன் பிரதேசமாக உருவாக்க மத்திய அரசு திட்டமிடுவதாக செய்திகள் வெளியான நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத், என்ன விலை கொடுத்தேனும் தமிழகத்தை காப்போம். தமிழகத்தை சிதற செய்து அதில் அரசியல் லாபம் அடையாளமென பாஜக நினைத்தால் அந்த எண்ணம் வீணானது எனவும் தெரிவித்துள்ளார்.