எம்ஜிஆரை சிரிக்கவைத்த கலைஞர்….திண்டுக்கல் லியோனி பகிர்ந்துகொள்ளும் அற்புத நிகழ்வு!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி, கலைஞர் மற்றும் எம்ஜிஆர் இருவருக்கும் இடையே நடந்த சுவாரசியமான நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.

தமிழகத்தின் முதலமைச்சராக எம்ஜிஆர் இருந்தபோது அமைச்சர்கள் தங்கள் சொந்த வேலைக்காக அரசு வாகனத்தை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம் ஒன்று ஏற்றப்பட்டது.

இதனால் அமைச்சர்கள் யாரும் தங்களுடைய சொந்த வேலைக்காக அரசு வாகனத்தைப் பயன்படுத்தவில்லை. இந்நிலையில், பத்திரிக்கையாளர் ஒருவர் அமைச்சர் ஒருவரின் வாகனம் கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வெளியே நிற்பதை பார்த்துள்ளார்.

மேலும், அந்த வாகனத்தை தனது கேமராவில் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த கருணாநிதியைச் சந்தித்தார்.

அமைச்சர்கள் சொந்த வேலைக்காக அரசு வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என சட்டம் இருக்கும்போது கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் முன்பு அமைச்சரின் கார் எவ்வாறு வந்தது எனக் கேள்வி எழுப்புங்கள் எனக்கூறி அவர் எடுத்த புகைப்படத்தை கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படத்தை கருணாநிதி சட்ட சபைக்கு எடுத்துச் சென்றார். பத்திரிகைக்காரர்கள் அனைவரும் சட்டசபைக்கு வெளியே காத்திருந்தனர்.

சட்ட சபை உள்ளே சென்ற கலைஞர் இந்த புகைப்படத்தை எம்ஜிஆரிடம் காட்டி இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு எம்ஜிஆர் அவர்களும் ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு அமைச்சரின் தாயார் தவறுதலாக வாகனத்தை எடுத்துச் சென்றதாக கலைஞருக்கு பதிலளித்தார்.

இருவரும் சட்டசபை முடிந்து வெளியே வரும்போது சிரித்துப் பேசிக் கொண்டு வந்தனர்.

இந்த புகைப்படத்தைக் காட்டி கேள்வி எழுப்பினால் அவர்களுக்குள் சண்டை வரும் அது குறித்து கேள்வி எழுப்பலாம் எனக் காத்திருந்த பத்திரிக்கையாளர்களுக்கு அவர்கள் சிரித்து பேசிக் கொண்டு வெளியில் வந்தது அதிர்ச்சி அளித்தது.

பத்திரிக்கையாளர்களின் குழப்பத்தை போக்கும் வகையில் கலைஞர் அவர்களிடம் எனக்கும், எம்ஜிஆருக்கும் நீங்கள் நினைப்பது போல எந்த ஒரு குடுமிப்பிடி சண்டையும் நடக்கவில்லை என்றார். மேலும், குடுமிப்பிடி சண்டை போடுவதற்கு எங்கள் இருவருக்குமே குடுமி கிடையாது என நகைச்சுவையாக கூறினார்.

இதனை அருகில் இருந்து கேட்ட எம்ஜிஆர் அங்கேயே வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

ஒரு மாநிலத்தின் ஆளும் கட்சித் தலைவருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இருந்த இந்த நட்பினை கலைஞரின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு தற்போது திண்டுக்கல் லியோனி பகிர்ந்து கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *