அரசியலில் அடுத்த இன்னிங்சை தொடங்குகிறாரா சசிகலா?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் ஓபிஎஸ் அவர்களின் தர்மயுத்தம், அமமுக கட்சி தினகரனால் உருவாக்கப்பட்டது மற்றும் யாரும் எதிர்பாராத விதமாக இபிஎஸ் முதலமைச்சராக பதவி ஏற்றது என தமிழக அரசியலில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருந்தது.
தமிழக அரசியல் அடுத்த திருப்புமுனையாக சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வீடு திரும்பிய சசிகலாவின் வருகை அமைந்தது.
சசிகலாவின் விடுதலையை கட்சித் தொண்டர்கள் ஆரவாரமாக கொண்டாடினார்கள். தமிழக அரசியலில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் சசிகலா விடுதலையானது அனைவரது கவனத்தையும் அவர் பக்கம் ஈர்த்தது.
ஆனால், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக கடந்த மார்ச் 3-ஆம் தேதி அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக சசிகலா அறிவித்தார்.
அவரது வருகையை அரசியல் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்த்த தொண்டர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
இருப்பினும், அதிமுக மற்றும் அமமுக ஒன்றிணைந்து பொது எதிரியான திமுக-வை வீழ்த்த வேண்டும் என சசிகலா கூறியது அதிமுக உடைந்து விடக் கூடாது என்ற அவரது எண்ணத்தை வெளிப்படுத்தியது. இதனைப் பலரும் அரசியல் இராஜதந்திரம் எனக் கூறி வந்தனர்.
ஆனால், நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக தோல்வியும், அமுமுக படுதோல்வியும் அடைந்தன.
இந்நிலையில் தற்போது சசிகலா பேசியிருக்கும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் தொண்டர் ஒருவரிடம் நீங்கள் கவலைப்படாமல் இருங்கள் நான் நிச்சயம் வருவேன் கட்சியை சரிசெய்துவிடலாம் என்று பேசியுள்ளார். மேலும், கொரோனா மிக மோசமாக இருக்கக்கூடிய காரணத்தால் குடும்பத்தாரை மிக கவனமுடன் இருக்குமாறு அவரது ஆதரவாளருக்கு அறிவுரை சொல்லுகிறார். சுமார் 1 நிமிடம் ஓடும் இந்த ஆடியோ மூலம், சசிகலா மீண்டும் தமிழக அரசியலில் வலம் வருவார் என்பதை காட்டுவது போல உள்ளது.
இதனால் அரசியல் விமர்சகர்கள் ஏற்கனவே கூறியது போல சசிகலா ராஜதந்திரத்தை கைப்பிடித்தாரா? தற்போது அரசியலில் இரண்டாவது இன்னிங்ஸ்-க்கு தயாராகி வருகிறாரா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.