காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் தேர்வு
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது.
ஆனாலும், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருக்கான தலைவரைத் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. இரண்டு முறை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் கூடியும் தலைவர் தேர்வில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், “அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் ஒப்புதலோடு, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக திரு கு.செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. அவர்களும், துணைத் தலைவராக திரு எஸ்.ராஜேஷ்குமார் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.