மக்களை மீட்கும் போராட்டத்தில் ஸ்டாலின் அரும்பணியாற்றுவார்! கே.பாலகிருஷ்ணன் நம்பிக்கை

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. இதனால், கூட்டணி கட்சியினர் பலரும் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பால கிருஷ்ணனும் ஸ்டாலினைச் சந்தித்தார். சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
”தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், மகத்தான வெற்றி பெற்று விரைவில் முதல்வராக பொறுப்பேற்க இருக்கிற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தோம்.
திமுக ஆட்சி அமைகிறபோது, தமிழகம் இன்றைக்கு சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் கரோனா கொடுமையை எதிர்த்து ஒரு மகத்தான போராட்டத்தை நடத்தி நிச்சயமாக இந்த கொடுமையிலிருந்து மக்களை மீட்கும் காரியத்தில் மு.க. ஸ்டாலின் அரும்பணி ஆற்றுவார் என்ற நம்பிக்கை நிச்சயம் எங்களுக்கு உண்டு” என்று தெரிவித்துள்ளார்.