இப்பொழுதாவது சமூக சிந்தனையை கற்றுக் கொள்ளுங்கள்! திருமாவிற்கு அண்ணாமலை கண்டனம்

கொரோனா இரண்டாவது அலை தீவுரமாக பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடி தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், “இந்தியா முழுவதும் கரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலை கடுமையாக மக்களை தாக்கிக் கொண்டிருக்கிறது. இலட்சக் கணக்கானோர் இதனால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன.

போதுமான கால அவகாசம் இருந்தும் கரோனாவைக் கட்டுப்படுத்தத் தவறியதோடு பல்லாயிரக்கணக்கான உயிர் இழப்புகளுக்கும் காரணமாகியிருக்கும் பிரதமர் மோடி இந்த நிலைக்குத் தார்மீகப் பொறுப்பேற்று தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

மக்களின் உயிர்மீது எவ்வித அக்கறையும் இல்லாமல் நாட்டைக் கடுமையான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக்கி இருக்கும் திரு. மோடி அவர்கள் பிரதமர் பதவியில் நீடிப்பது இன்னும் பேராபத்தையே கொண்டுவரும்.

எனவே, தற்போது நாட்டில் நிலவும் சுகாதார நெருக்கடி நிலைக்குத் தார்மீகப் பொறுப்பேற்று உடனடியாக அவர் தனது பதவியிலிருந்து விலக முன்வரவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்திருந்தார்.

இதற்கு, பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். ”மக்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமானால் நீங்கள் முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். அதை விட்டுவிட்டு இந்த மாதிரி அர்த்தமற்ற நாடகத்தை நடத்தாதீர்கள்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *