பணப்பட்டுவாடா செய்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? – பாலகிருஷ்ணன் கேள்வி!

தேர்தலின்போது பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட பாஜவிகனர் மீது தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அரக்கோணத்திற்கு சென்று இரட்டை கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதனைதொடர்ந்து அங்குள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில், ”வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெறுவது வேதனை அளிக்கிறது. தேர்தல் முடிந்து ஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணப்படுவதால் இந்த ஒரு மாதத்திற்கு அரசு செயல்படாமல் இருப்பதற்கு தேர்தல் ஆணையம் தான் பொறுப்பேற்க வேண்டும்.
பாஜக போட்டியிடும் தொகுதியில் ஆயிரம் ரூபாய் முதல் மூவாயிரம் ரூபாய் வரைக்கும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணியை மக்கள் வெறுக்கின்றனர். இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 170 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் ” என்றார்.