தேர்தல் முடிவுக்காக காத்திருக்காமல் மக்களுக்காக ஒன்றிணைவோம் – ஸ்டாலின்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதற்காக தமிழக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”தேர்தல் நேரம் மட்டுமல்ல; எப்போதும் மக்களுடன் இணைந்திருக்கும் பேரியக்கம்தான் திமுக. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் கொரோனா பேரிடரால் தவித்த மக்களுக்கு உதவிடும் வகையில் ‘ஒன்றிணைவோம் வா’ எனும் செயல்பாட்டின் மூலம், கட்சிப் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினருக்கான உணவு, மருத்துவ உதவி, அத்தியாவசிய தேவைகளை திமுக நிறைவேற்றியது.
இந்த கோடைகாலத்தில் மக்களின் தாகம் தணிக்க திமுக.,வின் சார்பில் தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்திடுங்கள். கொரோனா இரண்டாவது அலை குறித்து மருத்துவர்களும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் எச்சரிக்கை செய்திருப்பதால் அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துங்கள். மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குங்கள்.
வாய்ப்புள்ள இடங்களில் முகக்கவசம், சானிடைசர் வழங்கிடுங்கள். தேர்தல் முடிவுகளில் நல்ல தீர்ப்பு நிச்சயம் வரும். எனினும், அதுவரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியை எப்போதும் போல இப்போதும் தொடர்ந்திட ‘ஒன்றிணைவோம் வாருங்கள்” என தெரிவித்துள்ளார்.