ஆ. ராசாவுக்கு கமல் ஆதரவளித்தாரா?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதில் ஒருவரையொருவர் விமர்சனம் செய்வதும் சகஜம் தான். ஆ. ராசாவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து பேசியிருந்தார். இந்த விமர்சனம் சர்ச்சையானது.
இதனையடுத்து, முதல்வரை விமர்சித்ததற்காக ஆ. ராசா வருத்தமடைந்து மன்னிப்பு கேட்பதாக தெரிவித்திருந்தார். ஆனாலும், ஆ. ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பி இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆ. ராசாவுக்கு கமல் ஆதரவு அளிப்பது போல அறிக்கை வெளியிட்டதாக தகவல் வந்தது. இதனை மக்கள் நீதி மய்யக் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் மறுத்துள்ளார். ட்விட்டரில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், சில சமூக விரோதிகளால் ஊடகங்களில் பரவும் இந்தச் சுற்றறிக்கை தவறானது. அருவருக்கத்தக்க இச்செயலை செய்தவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என கருத்து தெரிவித்துள்ளார்.