வாக்காளர்களுக்கு சேலை கொடுத்து ஓட்டு வாங்க அதிமுக முயற்சி
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சியினரும் பல்வேறு உத்திகளை கையாண்டு வாக்களர்களை கவர்ந்து வருகின்றனர்.வாக்கு பெறுவதற்காக மக்களுக்கு பணம்,பரிசுப் பொருள் வழங்குவது போன்ற செயல்களும் அரங்கேறி வருகின்றன.
இது போன்ற ஒரு சம்பவம் திருச்செங்கோடு அருகே நிகழ்ந்துள்ளது.திருச்செங்கோடு அருகே, அதிமுகவினர் வாக்காளர்களுக்கு வழங்க சரக்கு வேனில் கொண்டு வந்து பதுக்கிய சுமார் 5 ஆயிரம் சேலைகளை, பறக்கும்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் ஒன்றியம் பள்ளக்குழி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செல்வகுமாரின் தோட்டத்து வீட்டிற்கு மினி சரக்கு வேனில் சேலைகள் அடங்கிய பண்டல்கள் கொண்டு வரப்பட்டது. அதிமுகவினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, இந்த சேலைகளை கொண்டு சென்றதாக தகவல் பரவியது.
தகவல் அறிந்து அப்பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கொமதேக, திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், உடனடியாக செல்வகுமாரின் தோட்டத்து வீட்டுக்கு சென்றனர்.கொமதேக மற்றும் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது.
அந்த நேரத்தில், தேர்தல் பறக்கும்படை அலுவலர் சரவணன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து, அங்கிருந்த 6 பண்டல்களை கைப்பற்றினர். இதில் சுமார் 5 ஆயிரம் சேலைகள் இருக்கலாம் என தெரிவித்தனர். பறிமுதல் செய்த சேலை பண்டல்களை, திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்துக்கு கொண்டுசென்று ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.