எம்.சி.சம்பத் மற்றும் சி.விஜயபாஸ்கர் வீடுகளில் வருமானவரித்துறை அதிரடி சோதனை
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் வருமான வரித்துறையின் சோதனையும் அதிரடியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,அதிமுக அமைச்சர்கள் எம்.சி.சம்பத் மற்றும் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அமைச்சர் எம்.சி. சம்பத்தின் கடலூரில் இருக்கும் உறவினர்களை தொடர்ந்து தருமபுரியில் உள்ள அவரது சம்மந்தி வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் 6 கோடி ரூபாய் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் தொகுதியில் போட்டியிடும் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்தின் சம்மந்தி இளங்கோவனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். தருமபுரியில் இருந்து பென்னாகரம் செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளிகள், நிதி நிறுவனங்கள், வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகவும் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் 6 கோடி ரூபாய்க்கு மேல் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறையினர் கூறியுள்ளனர். மேலும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போட்டியிடும் விராலிமலை தொகுதியில் வாக்காளர்களுக்கு பெருமளவு பணம் விநியோகம் நடைபெற போவதாக தகவல்கள் வெளியாகியது. இதையடுத்து விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாருக்கு சொந்தமான இடங்களில் 14 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள். சோதனையில் 50 லட்சம் ரூபாய் ரொக்கம், மற்றும் கிலோ கணக்கில் தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.