ஆதார் தகவலை திருடியதா பாஜக?

தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. புதுச்சேரியில், பாஜக அரசு குறுஞ்செய்தி மூலம் பிரச்சாரம் செய்து வருகிறது. ஆதாரிலிருந்து பெறப்பட்ட வாக்காளர்களின் வாட்ஸ் அப் எண்ணின் மூலம் பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது.
மேலும், அந்த வாக்காளர்களை பகுதி பகுதியாக பிரித்து 952 வாட்ஸ் அப் குழுக்களை பாஜக அமைத்துள்ளது. இவைதவிர, அந்த அலைபேசி எண்களுக்கு அழைப்பு விடுத்து வாக்காளர் பெயர், பகுதி உள்ளிட்ட விபரங்களைக் கூறி அத்தொகுதியின் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும் கூறியுள்ளது.
இது குறித்து இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தனர். ஆனால், சரியான விசாரணை நடைபெறாததால் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம். இந்த வழக்கை விசாரிக்காத தேர்தல் ஆணையத்துக்கு கண்டனத்தை தெரிவித்ததோடு, தனிநபர் உரிமைகளுக்கும், சட்டத்துக்கும் புறம்பான பாஜகவின் இச்செயல் குறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக விசாரித்து இரண்டு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், இந்த புகாரினால் புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளது.