வருமான வரி சோதனை அரசியல் உள் நோக்கம் கொண்டது – துரைமுருகன்

திருவண்ணாமலை திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் எ.வ வேலு. இவருக்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 20 வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் எ.வ வேலுவின் கல்லூரி, வீடு, அறக்கட்டளை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
எ.வ வேலுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்திருந்தார். வாக்காளர்களுக்கு பணம் விநியாகம் செய்யப்பட்டது என புகார் எழுந்த நிலையில், இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தேர்தலில் திமுக பெறப்போகும் வெற்றியை பொறுக்க முடியாமல் அரசு இந்த சோதனையை நடத்தியுள்ளது. சோதனையில் இதுவரை எந்த பணமும் சிக்கவில்லை.
ஆளுங்கட்சி அதிகார துஷ்பிரோயகம் செய்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் செய்யப்பட்டுள்ள இந்த சோதனையை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது” என தெரிவித்தார்.