பிரேமலதாவிற்கு கொரோனா இல்லை.. பிரச்சாரத்திற்கு அனுமதி!

தேமுதிக கட்சியின் பொருளாளரும், சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் பிரேமலதாவுக்கு கொரோனா இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சதீஷின் மனைவி பூர்ணிமாவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர்கள் இருவருடனும் தேமுதிக பொருளாளாரும், விருத்தாச்சலம் தொகுதி வேட்பாளருமான பிரேமலதா தொடர்பில் இருந்ததால், பிரச்சாரத்திற்கு வந்த அவரை பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை அறிவுறுத்தியது.
மேலும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியும் நிற்காமல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த இடத்திலேயே பிரேமலதாவுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவக் குழுவினர் முயற்சித்தது. இதனால், சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, மதிய உணவு இடைவேளையின் போது அவருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இன்று காலையில், அவரிடம் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு வெளியானது. அதில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்ததையடுத்து, தற்போது அவருக்கு பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.