திமுக வேட்பாளருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் எ.வ வேலு. இவருக்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 20 வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் எ.வ வேலுவின் கல்லூரி, வீடு, அறக்கட்டளை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் எ.வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் ஐடிரெய்டு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வருமான வரித்துறையினர் தீவிரமாக சோதனை நடத்தி வரும் இந்த நேரத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில் சோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.