ஊழலுக்காகவே நடத்தப்படுவது தான் அதிமுக ஆட்சி – கிருஷ்ணகிரி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பழைய பேருந்து நிலையத்தில் திமுக வேட்பாளர்கள் கிருஷ்ணகிரி செங்குட்டுவன், ஓசூர் பிரகாஷ், வேப்பனஹள்ளி முருகன், பர்கூர் மதியழகன், ஊத்தங்கரை காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகம், தளி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமசந்திரன் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், பிரிட்டீஷ் காலத்தில் தமிழகத்தின் நுழைவு வாயிலாக இருந்தது கிருஷ்ணகிரி.
ஆனால் இந்த மாவட்டத்தில் அமைச்சரே இல்லாமல் ஒருவர் அமைச்சராக செயல்படுகிறார். அவரது பெயர் 30 பர்சன்ட் முனுசாமி. ஜெயலலிதா இருந்த போது நடந்த பொதுக்குழுவில் கட்சியினர் அவரை இப்படி அழைத்தனர். அதனால் அவரது மந்திரிபதவி பறிபோனது. ஆனால், அந்த அம்மையார் இறந்த பிறகு அவருக்கு புதுவாழ்வு கிடைத்துள்ளது. 2018-ல் கிருஷ்ணகிரியில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவர் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் ஓபிஎஸ் உடன் இணைந்து தர்மயுத்தம் நடத்தவும் தூண்டிவிட்டார். பழனிசாமியையும், பன்னீரையும் மிரட்டி எம்.பி பதவி வாங்கினார். அதன்பிறகு வாய்திறக்கவே இல்லை.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி இன்னும் நான்கரை வருடங்கள் உள்ள நிலையில், தற்போது எம்.எல்.ஏ-வாக போட்டியிடுகிறார். அப்படிப்பட்டவரை நீங்கள் தோற்கடிக்க வேண்டாமா? இப்போது தமிழகத்தில் கமிஷன், கரெப்ஷன், கலெக்ஷன் என்ற குறிக்கோளுடன் ஊழல்நிறைந்த கொடிய ஆட்சி நடக்கிறது. இது எந்ததெந்த ஊழல் என்பது குறித்து கவர்னரிடம் தெளிவான பட்டியலை கொடுத்துள்ளோம்.
பொதுப்பணித்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் பழனிசாமி, அனைத்து டெண்டர்களையும் தனது சம்பந்திக்கும், அவரது சம்பந்திக்கும் கொடுத்துள்ளார். இது குறித்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் சென்று அதற்கு தடைவாங்கினார் பழனிச்சாமி. அதனால் தான் தற்போது அவர் முதல்வராக இருக்கிறார். இல்லாவிட்டால் சிறையில் இருந்திருப்பார் எனவும் பேசினார்.