மன்மோகன் சிங் கொள்கையை தி.மு.க. பின்பற்றும் – அழகிரி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதார கொள்கையை தி.மு.க. பின்பற்றும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசினார்.

சென்னை வேளச்சேரி தொகுதி, தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானாவை ஆதரித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, நேற்று திருவான்மியூரில் பிரசாரம் செய்தார்.
தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றால் தான், விலைவாசி உயர்வு கட்டுக்குள் வரும். காங்கிரஸ் ஆட்சியை விட, 40 சதவீதம் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ஊதியத்தின் பெரும்பகுதி, விலை வாசி உயர்வால் செலவாகி விடுகிறது. ‘மோடியா, லேடியா’ என, கேள்வி எழுப்பி, தைரியமாக செயல்பட்டவர் ஜெயலலிதா. மடியில் கனம் உள்ளதால், பழனிசாமி பயத்தில் உள்ளார்.

latest tamil news

வீட்டுக்கு, ஒருவருக்கு அரசு வேலை என, அறிவிக்கும் அ.தி.மு.க., ஐந்து ஆண்டுகளில் எத்தனை இளைஞர்களுக்கு வேலை வழங்கியது. தேர்தலில் வென்றால், 15 லட்சம் ரூபாய் வழங்குவதாக மோடி அறிவித்தாரே; கொடுத்தாரா? கிளை செயலராக இருந்து, ஸ்டாலின் கட்சியில் வளர்ந்தவர். படிப்படியாக, வளர்ந்தவருக்கு வாய்ப்பு கொடுங்கள். ராகுல், ஐந்து ஆண்டுக்கு முன்பே, ஸ்டாலினை முதல்வராக அறிவித்தார்.
மன்மோகன் சிங், பொருளாதார கொள்கையை தி.மு.க., பின்பற்றும். விவசாயிகளுக்காக, சுவாமிநாதன் அறிக்கையை பின்பற்றுவோம். இஸ்லாமியரான ஹசன், நாகாத்தம்மன் கோவில் வாசலில் பிரசாரத்தை துவங்கி இருக்கிறார். இது தான், மதசார்பின்மை. ஹசனுக்கு தான் நாகாத்தம்மன் அருள் வழங்குவார்.இவ்வாறு, அழகிரி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *