மகா நடிகராக இருந்தால் மட்டுமே பாமகவில் பயணிக்க முடியும் – வைத்தி

அரியலூர் மாவட்டம், பெரியதத்தூரைச் சேர்ந்தவர் வைத்தி. வன்னியர் சங்க மாநிலச் செயலராக பொறுப்பு வகித்த இவர், ஜெயங்கொண்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார். எனினும், பாமக பட்டியலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் வழக்கறிஞர் பாலு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வன்னியர் சங்க செயலர் மற்றும் பாமகஅடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக வைத்தி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அரியலூர், ஆண்டிமடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”பாமகவுக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு எந்த ஒரு மரியாதையும் இல்லை. எதுவுமே இல்லாமல் கட்சித் தொண்டர்களின் சுக, துக்கங்களில் பங்குகொள்ளாதவரைத் தேர்தலில் நிறுத்தி இருக்கிறார்கள்.

மகா நடிகனாக இருந்தால்தான் பாமகவில் பயணிக்க முடியும் என்பதுதான் நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம். அதுபோல் நடித்து, ஏமாற்றி அரசியல் செய்ய எனக்குத் தெரியாது.

இந்த இயக்கத்துக்காகத் தன்னையே அர்ப்பணித்து, இறந்தும் விட்டார் காடுவெட்டி குரு அண்ணன். எனக்கு வாய்ப்பு இல்லையென்றாலும் காடுவெட்டி குருவின் மனைவிக்கு வாய்ப்பு கொடுத்திருந்தாலாவது மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். கட்சிக்கு உண்மையாக உழைத்தவர்களை விட்டுவிட்டு, புதிதாக இங்கே வேட்பாளரை நிறுத்தவேண்டியதன் அவசியம் என்ன?

அதனால்தான் நான் வன்னியர் சங்க மாநிலச் செயலர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். ஜெயம்கொண்டம் தொகுதியில் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா தேர்தலில் சுயேச்சையாகப் போட்டி இடுகிறார்” என்று வைத்தி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *