இன்று வெளியாகிறது திமுகவின் வேட்பாளர் பட்டியல்!
திமுக வேட்பாளார் பட்டியல் இன்று காலை வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைமைக் கழகம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இப்பட்டியலை வெளியிடுகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை திமுக மெகா கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. திமுகவில் மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கூட்டனிக் கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் பெரும்பாலும் வெளியாகிவிட்ட நிலையில் தலைமை தாங்கும் திமுக இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறது.
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களைத் தவிர்த்து திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகள் பல உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் மொத்தம் 187 தொகுதிகளில் திமுக கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறது.
வேட்பாளர் பட்டியலை நேற்றே திமுக வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நள்ளிரவில் தான் திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தொகுதி ஒதுக்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் ஸ்டாலின் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார். அதிமுக வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லாத நிலையில் இன்றைய திமுக வேட்பாளர் பட்டியலில் பெண்கள், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுமுகங்களுக்கும் வாய்ப்பு இருக்கும் என்றே கூறப்படுகிறது. சிட்டிங் எம்எல்ஏ.,க்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.