சசிகலாவால் தான் அதிமுகவை காப்பாற்ற முடியும் – ராஜ வர்மன்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில், பல மாவட்டங்களில் அதிமுக தலைவர்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது. பல அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் மீண்டும் போட்டியிட அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்படாதது தொண்டர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பலரும் டிடிவி தினகரனைச் சந்தித்து அ.ம.மு.க.வில் சேர்ந்து வருகின்றனர்.
அப்படி அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜ வர்மன் இன்று டிடிவி தினகரனைச் சந்தித்து அமமுகவில் இணைந்துள்ளார். சாத்தூர் எம்.எல்.ஏ ராஜ வர்மனுக்கும், அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் பல நாட்களாகவே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அமமுக வில் சேர்ந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ. ராஜவர்மன், “அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டத்திற்கு இது வரையில் எதுவுமே செய்ததில்லை. அதிமுகவில் இப்போது கட்சியை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா உற்சவர் என்றால், சசிகலா தான் மூலவர்! ராஜேந்திர பாலாஜியின் சதியால் தான் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதிமுகவை சசிகலாவால் தான் காப்பாற்ற முடியும்”என்று கூறியுள்ளார்.